சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி உள்பட 4 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வெவ்வேறு பிரச்சினை தொடர்பாக 4 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-04 21:32 GMT

ரூ.4 லட்சம் மோசடி

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த சாத்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சொர்ணம் (வயது 70). இவரது மகள் மோகனா. இவர்கள் 2 பேரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்ற முயன்றனர். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில், சாத்தம்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் சொர்ணம் மாதம் ரூ.5 ஆயிரம் சீட்டு போட்டு வந்துள்ளார். ஆனால் சீட்டு முதிர்வு தொகையான ரூ.4 லட்சத்தை கேட்டபோது, அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும், இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சொர்ணம் தனது மகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

தீக்குளிக்க முயற்சி

ஆத்தூர் அருகே கீரிப்பட்டியை சேர்ந்தவர் செல்வி (52) என்பவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் நுழைவு வாயிலில் நின்று கொண்டு திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் செல்வியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியிடம் செல்வியின் மகன் குமார் ரிக் வண்டி வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அவர்கள் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்தால், ரூ.11 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதை உண்மை என்று நம்பிய குமார், தனது தாய்க்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை எடுத்து அந்த தம்பதியிடம் கொடுத்துள்ளார். ஆனால் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்துவிட்டு குமாருக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை. மேலும், வீட்டு பத்திரத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் வீட்டு பத்திரத்தை மீட்டு தரக்கோரி செல்வி நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்

சேலம் அருகே சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (51). இவர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பின்னர் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த ஒருவரிடம் 900 சதுரடி நிலத்தை சாந்தி விலைக்கு வாங்கி வீடு கட்டியுள்ளார். அதன்பிறகு அந்த வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு மல்லமூப்பம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் கடந்த 6 ஆண்டுகள் ஆகியும் அவரது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி சாந்தி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. வெவ்வேறு சம்பவம் தொடர்பாக கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூதாட்டி உள்பட 4 பெண்களையும் டவுன் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சேலத்தில் 4 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்