திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்; 8 பேர் காயம் போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தால் திருச்சி-சென்னை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-08-24 16:53 GMT

மயிலம், 

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்

திருச்சியில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு மினிலாரி ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. மினிலாரியை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ஞானராஜ்(வயது 27) என்பவர் ஓட்டினார். அந்த மினிலாரி நேற்று மாலை விழுப்புரம் மாவட்டம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்த தென்பசார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று மினிலாரி மீது விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலையில் கவிழ்ந்தது. அந்த சமயத்தில் பின்னால் வந்த கார் மினிலாரி மீது மோதியது. விபத்துக்குள்ளான கார் மீது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி பின்னால் வந்த தனியார் பஸ்சும் மோதியது.

காரில் வந்த 8 பேர் காயம்

இந்த விபத்தில் காரில் வந்த சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த டிரைவர் தமிழ்ச்செல்வன், சக்திவேல், லட்சுமணன், ஆகாஷ், குமார், காமேஷ், ராசு, அய்யப்பன் ஆகிய 8 பேர் காயமடைந்தனர். மினிலாரி டிரைவர் காயமின்றி உயிர்தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விபத்தில் சிக்கிய 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்