தினமும் 4 டன் குப்பைகள் தேங்கும் நிலை
பள்ளப்பட்டி பஞ்சாயத்தில் தினமும் 4 டன் குப்பைகள் தேங்கும் நிலை உள்ளதால் மாற்று நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி,
பள்ளப்பட்டி பஞ்சாயத்தில் தினமும் 4 டன் குப்பைகள் தேங்கும் நிலை உள்ளதால் மாற்று நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
28 கிராமங்கள்
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் 28 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து தினமும் 4 டன் குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளை கடந்த காலங்களில் பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பல இடங்களில் கொட்டப்பட்டு வந்தது.
இதனால் சுகாதாரம் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தேங்கி கிடந்த குப்பைகளை பஞ்சாயத்து நிர்வாகம் கடும் முயற்சிக்கு பின்னர் அகற்றியது. தற்போது அந்த இடங்கள் சுகாதாரமான நிலையில் உள்ளது. பள்ளப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட புதிய இடம் தேர்வு செய்யப்படாத நிலையில் குப்பைகள் பல இடங்களில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
தேங்கி கிடக்கும் குப்பைகள்
இந்த குப்பைகளை அருகில் உள்ள சிவகாசி மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை மையங்களுக்கு கொண்டு சென்று அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பள்ளப்பட்டி பகுதி பஞ்சாயத்து மக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இதனால் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் பல இடங்களில் குப்பைகள் தேங்கி வருகிறது. நோய் பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் குப்பைகளை அகற்ற தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்று இடம்
இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் ராஜபாண்டியிடம் கேட்டபோது, பள்ளப்பட்டி பஞ்சாயத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் கொட்ட அனுமதி கேட்டு உள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் இங்கு இருக்கும் அனைத்து குப்பைகளையும் அங்கு அனுப்பி அழிக்கப்படும்.
அப்படி இல்லாத நிலையில் குப்பை கொட்ட மாற்று இடத்தை தேர்வு செய்து தரும்படி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும். இதற்கு தேவையான நடவடிக்கையை கலெக்டர் ஜெயசீலன் எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.