அனைத்து சிவன் கோவில்களிலும் 4 கால சிறப்பு பூஜை
நாளை மகாசிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் 4 கால சிறப்பு பூஜையும், கிராமங்களில் குலதெய்வ வழிபாடும் நடக்கிறது.
நாளை மகாசிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் 4 கால சிறப்பு பூஜையும், கிராமங்களில் குலதெய்வ வழிபாடும் நடக்கிறது.
மகா சிவராத்திரி
சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலைசிறந்தது சிவராத்திரி விரதம் என கூறப்படுகிறது. சிவராத்திரியன்று சிவபெருமானை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர்களுக்கு நற்கதி கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. சிவராத்திரி 5 வகையாக சொல்லப்பட்டிருக்கிறது. அவை மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, பாத சிவராத்திரி. இதில் பாத சிவராத்திரி மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. இந்த சிவராத்திரிக்கு வருஷ சிவராத்திரி என்ற பெயரும் உண்டு. சிவராத்திரி அன்று சிவபெருமான் பார்வதிதேவியை தன் மடி மீது அமர்த்திக் கொண்டு அவருக்கு ஆகமங்களின் நுண்பொருளை விளக்கியதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
சிறப்பு பூஜை
சிவராத்திரியன்று சிவாலயங்களில் நான்கு கால சிறப்பு பூஜை நடைபெறும். விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி திருமேனிநாதசுவாமி கோவில், அருப்புக்கோட்டை சொக்கநாத சுவாமி கோவில், விருதுநகர் படிக்காசுஅளந்ந ஸ்ரீ சொக்கநாதர் சுவாமி கோவில், சிவகாசி விஸ்வநாதசுவாமி கோவில், சாத்தூர் சிவன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சாமி கோவில், ராஜபாளையம் மயூரநாதர் கோவில் என பல்வேறு சிவாலயங்கள் உள்ளன.
இது தவிர கிராமப்புறங்களிலும் சிவன் கோவில்கள் பரவலாக உள்ளது. இந்த சிவன் கோவில்களில் நாளை (சனிக்கிழமை) 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வது வழக்கம். சிவராத்திரியன்று 4 காலங்களிலும் பஞ்ச வில்வங்கள் கொண்டு சிவலிங்கத்துக்கு பஞ்சமுக அர்ச்சனை செய்யவேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
குலதெய்வ வழிபாடு
விருதுநகர் மாவட்டத்தில் சிவராத்திரியன்று குல தெய்வ வழிபாடு என்பது மிக சிறப்பாக நடைபெறும். தொலைதூர மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களில் இருந்தும் இந்த மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர்கள் தங்கள் குலதெய்வங்களை தேடி வந்து பிரார்த்தனை செய்வர். நாளைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் குல தெய்வ கோவில்களில் திரளான பக்தர்கள் திரண்டு குலதெய்வ வழிபாடு நடத்துவர்.