நெல்லிக்குப்பம் அருகேஅடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டுமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நெல்லிக்குப்பம் அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் புகுந்து செல்போன்கள், பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லிக்குப்பம்,
பூட்டுகள் உடைப்பு
நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் காளி கோவில் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் கார் ஒர்க்ஷாப், மருத்துக்கடை, செல்போன் கடை, ஆயில் விற்பனை கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு கடை உரிமையாளர்கள் வழக்கம்போல் கடைகளை பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று காலை கடைகளை திறக்க வந்தனர். அப்போது 4 கடைகளின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கடைக்காரர்கள் இதுபற்றி நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
செல்போன்கள், பணம் திருட்டு
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடைகளை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் ஒர்க்ஷாப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், மருந்துக்கடையில் ஹார்லிக்ஸ் பாட்டில்கள், மாத்திரைகள், செல்போன் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புதிய செல்போன்கள், சார்ஜர்கள் உள்ளிட்ட பொருட்கள், ஆயில் கடையில் இருந்த ரூ.4 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 4 கடைகளின் பூட்டுகளை உடைத்து முகமூடி கொள்ளையர்கள் பணம் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.