இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது
இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மீனவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருவது வழக்கம்.
இந்தநிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 172 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
4 பேர் கைது
இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (வயது 54) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், இவரும் அவரது மகன் அசோக் (28) மற்றும் அம்மாசி மகன் கருப்பு (22), செல்வம் மகன் சக்தி (20) ஆகியோர் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் சுமார் 30 நாட்டிக்கல் தொலைவில் அனலை தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களையும், விசைப்படகையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கையில் உள்ள பருத்தி துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இந்த கைது சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை
இதுகுறித்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு சங்கத்தலைவர் ஹசன் முஹைதீன் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு 4 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் உடனே விடுவிக்க இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இனிமேல் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.