ரூ.11½ லட்சம் கொள்ளையடித்த 4 பேர் கைது

திண்டுக்கல் அருகே லாரி டிரைவர்களை கட்டிப்போட்டு, ரூ.11½ லட்சம் கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-16 17:18 GMT

ரூ.11 லட்சத்து 65 ஆயிரம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் ஆனந்த். காய்கறி மொத்த வியாபாரி. இவர், தர்மபுரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பத்தளப்பள்ளி மார்க்கெட்டில், வியாபாரி சீனிவாச ரெட்டியிடம் காய்கறிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.

அதன்படி கடந்த 15-ந்தேதி தனது உறவினரும், டிரைவருமான நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 54), தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காடியம்பட்டி கிராமத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார் (29) ஆகியோரை காய்கறி வாங்கி வருவதற்கு தனது லாரியில் பத்தளப்பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

இவர்களிடம் காய்களுக்கு வழங்குவதற்காக ரூ.11½ லட்சத்தையும், வழிச்செலவுக்காக ரூ.15 ஆயிரத்தை ஆனந்த் கொடுத்தார். நேற்று முன்தினம் அதிகாலை 2¾ மணி அளவில் திண்டுக்கல்-பெங்களூரு நான்கு வழிச்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை, பாலகிருஷ்ணன் ஓட்டினார்.

காரில் வந்த கொள்ளை கும்பல்

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே உள்ள காமாட்சிபுரம் என்னுமிடத்தில் லாரி வந்தது. அப்போது திடீரென லாரியை மறுத்து கார் ஒன்று குறுக்கே வந்து நின்றது. இதனால் திடுக்கிட்ட பாலகிருஷ்ணன், லாரியை நிறுத்தினார்.

கண்இமைக்கும் நேரத்தில் காரில் இருந்து இறங்கிய கும்பல், மங்கி குல்லா அணிந்தபடி லாரியின் கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பாலகிருஷ்ணன், சதீஷ்குமார் ஆகியோரை இரும்புகம்பியால் சரமாரியாக தாக்கினர்.

மேலும் தாங்கள் வைத்திருந்த பட்டாகத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்தை பறித்தனர். பின்னர் லாரியை கடத்திய அவர்கள் பாலகிருஷ்ணன், சதீஷ்குமார் ஆகியோரின் கண்கள் மற்றும் கைகளை கட்டினர்.

தனிப்படையினர் விசாரணை

திண்டுக்கல்-பெங்களூரு நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே விருதலைப்பட்டி என்னுமிடத்தில் லாரியை நிறுத்தினர். கண், கைகள் கட்டப்பட்ட நிலையில் 2 டிரைவர்களையும் லாரிக்குள் போட்டனர். அவர்களின் செல்போன்களை பறித்த கும்பல், லாரி சாவியையும் எடுத்து கொண்டனர்.

இதற்கிடையே ஏற்கனவே தாங்கள் வந்த கார் அங்கு தயாராக நின்றது. அதில் ஏறி, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். இதற்கிடையே கை, கண்களில் கட்டியிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டு தப்பி வந்த பாலகிருஷ்ணன், சதீஷ்குமார் ஆகியோர் போலீசில் புகார் அளித்தனர்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

திண்டுக்கல்-பெங்களூரு நான்கு வழிச்சாலையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் நெடுஞ்சாலையில் வழிநெடுகிலும், பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது, கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் பற்றிய விவரம் தெரியவந்தது. அந்த கார், கிருஷ்ணகிரி மாவட்ட பதிவு எண்களை கொண்டது ஆகும். அதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீசார் விசாரணையில் இறங்கினர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த காரை, கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர். தற்போது அந்த கார், கிருஷ்ணகிரி நகர் பகுதியில் வலம் வந்து கொண்டிருந்தது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

4 பேர் கைது

இதனையடுத்து திண்டுக்கல்லில் இருந்து தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரி விரைந்தனர். அங்கு சாலையில் சென்று கொண்டிருந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் 4 பேர் இருந்தனர். அவர்களை பிடித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு தனிப்படை போலீசார் கொண்டு வந்தனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி பாரதிநகரை சேர்ந்த ரகு (46), மல்லப்பாடி பர்கூரை சேர்ந்த எம்.சதீஷ்குமார் (31), தேவசமுத்திரத்தை சேர்ந்த முருகன் (42), புலிக்கொண்டா பகுதியை சேர்ந்த கே.சதீஷ்குமார் (31) என்று தெரியவந்தது.

இவர்கள் உள்பட 7 பேர் சேர்ந்து லாரி டிரைவர்களை கட்டிப்போட்டு ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்தை கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டனர். இதனையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொழில் போட்டி

போலீசார் நடத்திய விசாரணையில் சீனிவாச ரெட்டி, ஆனந்த் ஆகியோருடன் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய ரவி, அமல்தாஸ், கிரி ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர்களை பிடித்தால் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட முருகன், ஏற்கனவே ஆனந்திடம் டிரைவராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்