மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
பரமத்திவேலூர் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் தங்க நகைகள், பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.
பரமத்திவேலூர்
தங்கம், பணம் கொள்ளை
பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம், குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 54). தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23). இவருக்கு நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் நடக்க இருந்தது. நேற்றுமுன்தினம் கந்தசாமி தனது குடும்பத்தினருடன் மகளின் திருமணத்திற்கு துணிமணிகள் எடுக்க ஈரோட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றனர். வீட்டில் கந்தசாமியின் தாயார் அருக்காணி (80) மட்டும் இருந்தார்.
இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த கந்தசாமியின் தாயார் அருக்காணியிடம் ஒருவர் நைசாக பேச்சிக்கொடுத்தார். மற்றொரு மர்மநபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோ சாவியை எடுத்து லாக்கரில் திருமணத்திற்கு சீர்வரிசை கொடுப்பதற்காக வைத்திருந்த 60 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் ஆகியவற்றை திருடி சென்றனர்.
தனிப்படைகள் அமைப்பு
இதுகுறித்து மூதாட்டி கந்தசாமிக்கு தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்த கந்தசாமி பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகை, ரூ.9 லட்சத்தை மா்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கந்தசாமி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜு, இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் கைரேகைகளை பதிவு செய்து சோதனை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.