கூலிப்படையினர் 4 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பல்லடத்தில் பதுங்கல்

கூலிப்படையினர் 4 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பல்லடத்தில் பதுங்கல்

Update: 2022-12-15 10:34 GMT

பல்லடம்

ஓசூரில் இருந்து 15 வயது சிறுமியை கடத்தி வந்த 4 பேர் கொண்ட கும்பல் பல்லடத்தில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுமி கடத்தல்

பல்லடம் புறநகர் பகுதியில் தினத்தனியாக வீடுகள் உள்ளன. இவற்றில் வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ஓசூர் போலீசார் இங்கு வந்து வீடுவீடாக சோதனை செய்தனர். காரணம் ஓசூரில் இருந்து 15 வயது சிறுமிைய 4 பேர் கொண்ட ஆசாமிகள் கடத்தி வந்து பல்லடம் புறநகர்பகுதியில் தங்க வைத்துள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஓசூர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியக்கவுண்டன்பாளையத்தில் தனியாக உள்ள ஒரு வீட்டின் முன்பு சொகுசு கார் மற்றும் ஸ்கூட்டர் நின்றுள்ளது. அந்த வீட்டில் 4 வாலிபர்கள் தங்கி இருந்துள்ளனர். இதையடுத்து அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்து அவர்களை பிடிக்க முற்பட்டனர். அப்போது வீட்டிற்குள் இருந்த 4 பேரும் பயங்கர ஆயுதங்களுடன் போலீசாரை தாக்க முயன்று காரில் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே பல்லடம் போலீசார் விரைந்து வந்து ஸ்கூட்டர் மற்றும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்லடம் பகுதியில் தங்கி இருந்த கூலிப்படையாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பயங்கர ஆயுதங்களுடன் காரில் 4 வாலிபர்கள் தங்கி இருப்பது குறித்து ஏற்கனவே பல்லடம் உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் உடனடியாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்து இருந்தால், அவர்களைப் பிடித்து இருக்கலாம். உளவுத்துறையில் அனுபவம் உள்ள போலீசார்களை நியமித்து, இதுபோன்று ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளில் புதிதாக குடியிருக்கும் வெளியூர் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்கள் என்ன குற்றச்செயலில் ஈடுபட வந்தார்களோ என அச்சமாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்