பெண் கவுன்சிலர் வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது
கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக ரூபின்ஷா உள்ளார்.;
தஞ்சை,
கும்பகோணத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் கவுன்சிலர் வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் கொலை முயற்சி வழக்கில் போலீசாரால் தேடப்பட்டவர்கள் ஆவர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ். இவரது மனைவி ரூபின்ஷா. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர், கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
அலெக்ஸ் வீட்டில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அலெக்சின் மனைவி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளதால் அவரது வீட்டில் சோதனை செய்வதற்காக அனுமதி வேண்டி கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அலெக்ஸ் வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் கட்டிலுக்கு அடியில் சிலர் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கெயில் ஆண்டனி(வயது22), அர்னால்டு ஆண்டனி(23), அருண்குமார்(21), பால்சாமி(23) ஆகிய 4 பேர் என்பதும், இவர்கள் 4 பேரும் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் அவர்கள் இங்கு வந்து பதுங்கி இருந்ததும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் கட்டிலுக்கு அடியில் சோதனை செய்தபோது அங்கு 10-க்கும் மேற்பட்ட கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கும்பகோணம் அருகே உள்ள பாத்திமாபுரத்தை சேர்ந்த விஸ்வா என்பவரை கெயில் ஆண்டனி, அர்னால்டு ஆண்டனி, அருண்குமார், பால்சாமி ஆகிய 4 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து விஸ்வா கொடுத்த புகாரின் பேரில் 4 பேரையும் தேடிவந்தோம்.
ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அலெக்ஸ் வீட்டில் சோதனை நடத்தியபோது கொலை முயற்சி வழக்கில் தேடி வந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு அலெக்ஸ் அடைக்கலம் கொடுத்த நிலையில் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவரையும் தேடி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.