தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் சிக்கினர்

ஓட்டப்பிடாரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-07 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வழிப்பறி

ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி (வயது 72), ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் மாடசாமி (60) ஆகியோரை 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இருவரையும் அரிவாளால் தாக்கி 10 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி புளியம்பட்டியில் உள்ள ஒரு விடுதியில் விடுதியில் தங்கியிருந்த தூத்துக்குடியை சேர்ந்த மகாராஜா (19), தூத்துக்குடி லூர்துபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் (19), ஷியாம்டேவிட் (19), தூத்துக்குடி யுனிகோ நகரைச் சேர்ந்த ஜவகர் (44) ஆகிய இருவரையும் ஏற்கனவே கைது செய்தனர்.

இதில் ஜவகர், கொள்ளைக்கார கும்பலுக்கு புளியம்பட்டியில் விடுதியில் தங்குவதற்கு அறை எடுத்துக் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2 பேர் கைது

மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை புளியம்பட்டியை சேர்ந்த ரோஷன் (21) உதவியுடன் தூத்துக்குடி பாத்திமா நகர் சேர்ந்த மோஹித் (19) என்பவர் விற்பதற்கு கொண்டு செல்வதை கண்டுபிடித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் ரோஷன், மோஹித் ஆகிய இருவரையும் விரைந்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி, தாளமுத்துநகர், மீளவிட்டான் ஆகிய இடங்களில் அரிவாளால் தாக்கி மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கொள்ளையர்களிடம் இருந்து திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள், 3 செல்போன், 10 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். அவர்கள் வழிப்பறிக்காக வைத்திருந்த 2 கத்திகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சூப்பிரண்டு பாராட்டு

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்