கோகுலின் தம்பி உள்பட 4 பேர் சிக்கினர்

கோவை கோர்ட்டு அருகே கொலை செய்யப்பட்ட ரவுடி கோகுலின் தம்பி உள்பட கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-11 19:15 GMT
சரவணம்பட்டி


கோவை கோர்ட்டு அருகே கொலை செய்யப்பட்ட ரவுடி கோகுலின் தம்பி உள்பட கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


மிரட்டி பணம்பறிப்பு


கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கோவில்பாளையம் எம்.ஜி. ஆர். நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் சிதம்பரம் (வயது34). கட்டிட மேஸ்திரி. இவர் அத்திப்பாளையத்தில் இருந்து கீரணத்தம் செல்லும் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.


அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் சிதம்பரத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.


இது குறித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிதம்பரத்திடம் பணம் பறித்தது லட்சுமி கார்டனை சேர்ந்த கோபால் என்பவருடைய மகன் பிரதீப் (20), வரதய்யங்கார்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் சந்தோஷ்குமார் (22), கே.கே.புதூரை சேர்ந்த சம்பத்தின் மகன் போலோ என்ற சுபாஷ் (23), லட்சுமிகார்டனை சேர்ந்த செல்வராஜின் மகன் விக்னேஷ் (26) என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


ஆயுதங்கள் பறிமுதல்


அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட பிரதீப், கடந்த பிப்ரவரி மாதம் கோவை கோர்ட்டு அருகே கொலை செய்யப் பட்ட ரவுடி கோகுல் என்பவரின் தம்பி என்பது தெரியவந்தது. மேலும் கைதானவர்கள், ரவுடி கோகுலின் கூட்டாளிகளாக இருந்ததும் தெரியவந்தது.


கைதான 4 பேரும் வேறு ஏதேனும் சசித்திட்டத்திற்காக ஒன்றாக கூடினார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்