தந்தை, மகன்கள் உள்பட 4 பேர் கைது

Update: 2023-06-01 19:30 GMT

சேலத்தில் ரவுடி கொலை வழக்கில் தந்தை, 2 மகன்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரவுடி கொலை

சேலம் அரிசிபாளையம் அவ்வையார் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 27). பிரபல ரவுடி. இவர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருடைய நண்பர் பிரபாகரன் (25). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவி (50) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி நள்ளிரவு யோகேஸ்வரன், பிரபாகரன் ஆகிய 2 பேர் சேர்ந்து ரவிக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்த அவருடைய மகன்கள் ராகுல் (24), பாரத் (21) மற்றும் உறவினர்கள் சேர்ந்து யோகேஸ்வரனை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

வாக்குமூலம்

இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ரவி, இவருடைய மகன்கள் ராகுல், பாரத், இவர்களது உறவினர் ரஞ்சித்குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்த கொலை குறித்து கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த அவர் தான் கைது செய்யப்பட்டதற்கு ரவி தான் காரணம் என்று நினைத்து அவரை கொலை செய்யும் நோக்கில் தாக்கி உள்ளார். அப்போது ரவி மற்றும் அவரது மகன்கள், உறவினர்கள் சேர்ந்து யோகேஸ்வரனை தாக்கி கொலை செய்து உள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்