பள்ளி மாணவன் உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்

வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் உள்பட 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2023-10-11 18:34 GMT

தொடர் மழை

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் காலியிடங்கள் மற்றும் வீட்டை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி அதில் ஏடிஸ் வகை கொசுப்புழுக்கள் உற்பத்தியாகிறது. இந்த கொசுக்கள் டெங்கு காய்ச்சலை உருவாக்கி வருகிறது.

வேலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுவை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

4 பேருக்கு டெங்கு காய்ச்சல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து நேற்று பரிசோதனை செய்யப்பட்டன. அதில் வேலூர் மாநகராட்சி 56-வது வார்டை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன், 14-வது வார்டை சேர்ந்த 40 வயது பெண், 48-வது வார்டு மற்றும் அணைக்கட்டு தாலுகா குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஆண்கள் 2 பேர் என மொத்தம் 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உள்ள டெங்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சுகாதாரப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்