வெவ்வேறு விபத்தில் டாக்டர் உள்பட 4 பேர் பலி

கரூர் அருகே நடந்த வெவ்வேறு விபத்தில் டாக்டர் உள்பட 4 பேர் பலியாகினர்.

Update: 2023-08-12 18:57 GMT

டாக்டர் பலி

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (வயது 26). இவர் திருவண்ணாமலையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர் சம்பவத்தன்று திருவண்ணாமலையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே, திருச்சி மாவட்டம் துறையூர் மருவத்தூர் பகுதியை சேர்ந்த தீனதயாளன் (24) என்பவர் திருப்பூரில் இருந்து சென்னை நோக்கி ஓட்டி வந்த வேன், தாமரைக்கண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி கோரகுத்தியை சேர்ந்தவர் ராமசாமி (55). தொழிலாளியான இவர், சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் ஈரோடு மாவட்டம் புள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டி வந்த கார், ராமசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமசாமி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர்

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (35). இவர் மாயனூரில் உள்ள டி.என்.பி.எல் குடோனில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் பிரகாஷ் மீது ேமாதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் மோகனசுந்தரம் (22). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்வதற்காக தனது நண்பர் லாலாபேட்டையை சேர்ந்த மணிமாறன் மகன் புருஷோத்தமன் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த ஒரு வேன் மீது மோகனசுந்தரம், புருஷோத்தமன் ஆகியோர் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மோகனசுந்தரத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த புருஷோத்தமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்