வாலிபர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 4 பேர் கைது

அன்னவாசலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-04-17 19:12 GMT

குடும்ப தகராறு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை சேர்ந்தவர் ராசாத்தி (வயது 38). இவரது கணவர் திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த முருகேசன் (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறினால் 2 மகன்களுடன் ராசாத்தி அன்னவாசலில் கடந்த சில ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். இந்நிலையில், அன்னவாசலை சேர்ந்த முத்துக்குமாருக்கும் (30), ராசாத்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ராசாத்தியின் மூத்த மகன் வெற்றிவேல் (17) சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இந்நிலையில், வெற்றிவேல் இறப்புக்கு முத்துக்குமார் தான் காரணம் எனக் கருதிய, முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் முத்துக்குமார் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் முத்துக்குமாரை அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றை கொண்டு வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துக்குமாரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுவன் உள்பட 4 பேர் கைது

இது தொடர்பாக 7 பேர் மீது அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராசாத்தி, பாலாமணி (40) அண்ணபூரணி (33) மற்றும் 13 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் முருகேசன், சண்முகம் (35), நாகராஜ் (29) உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சாலை மறியல்

முத்துக்குமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கூறி முத்துக்குமாரின் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று புதுக்கோட்டை இலுப்பூர் சாலையில் அன்னவாசல் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் ரமேஷ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் சிலர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் துணை சூப்பிரண்டு காயத்திரி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்