பட்டாக்கத்தியுடன் 4 பேர் கைது
பட்டாக்கத்தியுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தா.பேட்டை அருகே திருத்தலையூர் பஸ் நிறுத்தம் பகுதியில் 4 பேர் கையில் பட்டாக்கத்தியுடன் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாக்கத்தியுடன் நின்று கொண்டிருந்த 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் 4 பேரும் துறையூர் தாலுகா வடக்கு நல்லியம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 35), லோகநாதன் (27), துரைராஜ் (37), தொட்டியகுமார் (34) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பட்டாக்கத்தியை பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.