இரிடியம் விற்பனை தொடர்பான தகராறில் 4 பேர் கைது

இரிடியம் விற்பனை தொடர்பான தகராறில் 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-28 15:44 GMT

இரிடியம் விற்பனை தொடர்பான தகராறில் 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இரிடியம் விற்பனை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இன்று 4 பேர் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் இரிடியம் விற்பனை தொடர்பாக அவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததும் அதுதொடர்பாக அவர்கள் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

4 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சீனி முகமது (வயது 41). இவர் பழைய கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு திருவண்ணாமலை தேனிமலையை சேர்ந்த ரவி (45) என்பவர் அறிமுகமானார். ரவியிடம் சீனிமுகமது இரிடியம் விற்பனை செய்தால் அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது.

இதை நம்பிய ரவி அவரிடம் பல லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.

இதேபோல சீனிமுகமதுவிடம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (43), மதுரையை சேர்ந்த அன்பழகன் (52) ஆகியோரிடமும் பணம் பெற்று ஏமாற்றி உள்ளார்.

சீனி முகமது வாங்கிய பணத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இரிடியம் விற்பனை தொடர்பாக பணம் தருவதாக 3 பேரும் சேர்ந்து சீனி முகமதுவை திருவண்ணாமலைக்கு அழைத்தனர்.

அதன் பேரில் திருவண்ணாமலைக்கு வந்த சீனிமுகமதுவிடம், அவர்கள் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரிடம் இருந்து கார் உள்ளிட்டவற்றை பறித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வரப்பெற்ற புகாரில் 4 பேரையும் கைது செய்து மேல்விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்