வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த 4 மாத கர்ப்பிணி

நசியனூர் அருகே வீட்டுக்குள் மர்மமான முறையில் 4 மாத கர்ப்பிணி இறந்துகிடந்தார். அவரது சாவில் சந்தேகம் என சித்தோடு போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.

Update: 2022-10-29 21:28 GMT

பவானி

நசியனூர் அருகே வீட்டுக்குள் மர்மமான முறையில் 4 மாத கர்ப்பிணி இறந்துகிடந்தார். அவரது சாவில் சந்தேகம் என சித்தோடு போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.

4 மாத கர்ப்பிணி

நசியனூர் அருகே உள்ள ராயபாளையம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 26). இவருடைய மனைவி பிருந்தா (23). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பிருந்தாவின் தாய் இவர்களின் காதலை ஏற்றுக்கொண்டு விட்டார். இந்தநிலையில் பிருந்தா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இதைத்தொடர்ந்து ராயபாளையத்தில் கார்த்தியும், பிருந்தாவும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்கள். இதற்கிடையே தீபாவளியன்று பிருந்தாவின் சகோதரி மங்கையர்கரசி வீட்டுக்கு தம்பதி சென்று வந்தார்கள்.

பிணமாக கிடந்தார்

இந்நிலையில் கடந்த 27-ந் தேதி கார்த்தி திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுவிட்டார். அன்று இரவு பிருந்தா ஒரு தனியார் உணவு வினியோகிக்கும் நிறுவனத்தை செல்போனில் தொடர்பு கொண்டு, உணவு வரவழைத்து சாப்பிட்டு தூங்கிவிட்டார். மறுநாள் காலை (நேற்று முன்தினம்) நீண்ட நேரம் ஆகியும் பிருந்தா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளார்கள். அப்போது வீட்டுக்குள் பிருந்தா பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து உடனே பிருந்தாவின் தாய்க்கும், கார்த்திக்கும் தகவல் கொடுத்தார்கள். அவர்கள் பதறி அடித்து வந்து பார்த்தார்கள். பிருந்தாவின் உடலை பார்த்து அவர்கள் கதறி துடித்தார்கள்.

மர்ம சாவு

பின்னர் இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதற்கிடையே பிருந்தாவின் தாய் சித்தோடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதையடுத்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிருந்தா எப்படி இறந்தார்? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிருந்தாவுக்கும், கார்த்திக்கும் திருமணம் ஆகி 1½ ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ.வும் மேல் விசாரணை நடத்த உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்