தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தினர் 4 பேர் தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தினர் 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் காப்பாற்றினர்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்காலை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகன் மாரியப்பன் (வயது 40). ஜோதிடர். இவர், தனது மனைவி பத்தினி மற்றும் மகன், மகளுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தார். இவர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று குடும்பத்தினர் அனைவரின் மீதும் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று தடுத்தனர். தொடர்ந்து அவர்களின் மீது தண்ணீரை ஊற்றி 4 பேரையும் மீட்டனர். பின்னர் அறிவுரை வழங்கி அவர்களை போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
கந்து வட்டி
இதுகுறித்து மாரியப்பன் கூறும் போது, தனது உறவினரின் தேவைக்காக வட்டிக்கு ரூ.15 லட்சம் பணம் வாங்கி கொடுத்தேன். இதற்காக ரூ.10 லட்சம் வரை பணம் செலுத்தி உள்ளோம். எங்கள் வீட்டையும் எழுதி கொடுத்து விட்டோம். அதனை விற்று பணத்தை பெற்றுக் கொண்டனர். அதன்பிறகும் ரூ.10 லட்சம் பணம் தர வேண்டும் என்று கடன் கொடுத்தவர்கள் மிரட்டி வருகின்றனர். வட்டிக்கு மேல் வட்டியாக கந்து வட்டி போடுகிறார்கள். ஆகையால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.