மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர

Update: 2022-12-29 18:45 GMT

வேதாரண்யம்:

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

மீன்பிடிக்க சென்றனர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் 8 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

வலைகள் மாயம்

கோடியகரையில் தங்கி மீன் பிடித்து வந்த மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள்பேட்டையை சேர்ந்த பாண்டியன்(வயது 46) என்பவருக்கு சொந்தமான படகில் அவரும், வானகிரியை சேர்ந்த சக்திவேல்(20), மற்றொரு சக்திவேல்(40), பெருமாள்பேட்டையை சேர்ந்த திருச்செல்வன் ஆகிய 4 மீனவர்களும் நேற்று முன்தினம் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது கடலில் விரிக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வலைகள் மாயமானதாக தெரிகிறது.

4 மீனவர்கள் சிறைபிடிப்பு

இதனைத்தொடர்ந்து மீனவர்கள் வலையை தேடிச்சென்றபோது இந்திய எல்லையை தாண்டி இலங்கை வல்வட்டி துறைக்கு சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேரையும் சிறைபிடித்து அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்களை, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று கைது செய்து விசாரணை நடத்தினர்.

உடனடியாக மீட்க வேண்டும்

மயிலாடுதுறை மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றதை அறிந்த அவர்களின் உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கைது செய்யப்பட்ட மீனவர் பாண்டியன் மனைவி சுபா மற்றும் மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்