ஊட்டி
நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் 25 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
அப்போது அவர் கூறும்போது, மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்கி தங்களது வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக மாவட்ட தொழில் மையம், வங்கிகள் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 2 கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 1 கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. எனவே அரசின் திட்டங்களை தெரிந்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன் பெற வேண்டும் என்றார். அப்போது ஆர்.டி.ஓ. துரைசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) ஜெகதீசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகசிவா, தாசில்தார் சரவணக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.