ராமநாதபுரத்தில் ரூ.4 லட்சம் மோசடி
அமெரிக்க டாலரை மாற்றி இந்திய பணமாக தருமாறு கூறி ராமநாதபுரத்தில் டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
அமெரிக்க டாலரை மாற்றி இந்திய பணமாக தருமாறு கூறி ராமநாதபுரத்தில் டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்க டாலரை மாற்றி தருமாறு
ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூர் காதர்பாபா தெருவை சேர்ந்தவர் அயூப் ஆதில்சா மகன் அல்பாஷாகிர் (வயது 27). இவர் ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் எதிரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது செல்போனுக்கு வந்த தகவலை தொடர்ந்து நேற்று முன்தினம் அங்குள்ள தங்கும் விடுதிக்கு சென்றார். அங்கு இருந்த 2 பேர் 500 அமெரிக்க டாலரை இந்திய பணமாக மாற்றி தருமாறு கூறினர். இதையடுத்து 500 டாலர்களுக்கான இந்திய பணத்ைத அல்பாஷாகிர் கொடுக்க அதை ஒருநபர் பெற்று கொண்டார். மற்றொரு நபர் பக்கத்து அறையில் அமெரிக்க டாலரை எடுத்து வருவதாக கூறி சென்று சிறிது நேரம் கழித்து 500 அமெரிக்க டாலரை கொடுத்து உள்ளார்.
அதை வாங்கி கொண்டு அவர் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு வந்து விட்டார். அதன்பின்னர் அதே நபர்கள், 5 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு இந்திய பணம் மாற்றி தருமாறு கூறி இவரை அழைத்தனர்.
ரூ.4 லட்சம் மோசடி
இதை நம்பி ரூ.4 லட்சத்து 7 ஆயிரத்து 500-ஐ எடுத்து கொண்டு அந்த அறைக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த 2 பேரும் பணத்தை பெற்றுக்கொண்டு டாலரை எடுத்து வருவதாக கூறி ஒருவர் சென்றுள்ளார். அவர் சென்று சில நிமிடங்கள் கழித்து என்னாச்சு என தெரியவில்லை. இருங்கள் நான் சென்று பார்த்து அழைத்து வருகிறேன் என்று கூறி மற்றொருவரும் சென்றுள்ளார்.
இருவரும் வருவார்கள் எதிர்பார்த்து காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விடுதி வரவேற்பாளரிடம் விசாரித்த போது அவர்கள் 2 பேரும் காரில் தப்பி சென்றது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.
2 பேர் சிக்கினர்
போலீசார் அதிரடியாக அந்த ஆசாமிகள் தப்பிச் சென்ற கார் டிரைவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர். இதையடுத்து கார் டிரைவர் தேவகோட்டை அருகே மாவிடுதிகோட்டை பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் டீசல் போடுவதற்காக காரை நிறுத்தி உள்ளார். மொழி சரியாக தெரியாத நிலையிலும் கார் டிரைவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் பேசி வந்ததோடு காரை நிறுத்தியதை கண்ட 2 பேரும் டீசல் போடும் சமயத்தில் காரில் இருந்து பணம் உள்ள கைப்பையுடன் இறங்கி தப்பி ஓட முயன்றனர்.
அந்த பகுதியில் நேற்று முன்தினம் ரேக்ளா ரேஸ் நடந்து வந்ததால் ஏராளமானோர் திரண்டு நின்றிருந்தனர். அவர்களை நோக்கி கார் டிரைவர் திருடர்கள் திருடர்கள் என்று கத்தியதும் சுற்றி இருந்தவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தேவகோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் பிடித்து வைத்தனர். ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் அங்கு சென்று இருவரையும் கைது செய்து அழைத்து வந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மராட்டிய மாநிலம் நாசிக் நீல் ஆகாஷ் நீல்மணி பார்க் பகுதியை சேர்ந்த ஜெகன்நாத் மகன் யோகேஷ் (31), ஷாம் மகன் சேஷாங்க் பவத் (31) என்பது தெரிந்தது. இவர்கள் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் உள்ளன.