விவசாயிகளுக்கு ரூ.4½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

கஜா புயலால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு இழப்பீடாக விவசாயிகளுக்கு ரூ.4½ லட்சம் வழங்க வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளுக்கு திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

Update: 2022-11-25 18:45 GMT

கஜா புயலால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு இழப்பீடாக விவசாயிகளுக்கு ரூ.4½ லட்சம் வழங்க வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளுக்கு திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

புயலால் சேதமடைந்த நெல் மூட்டைகள்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் விஜயகுமாரி சரவணன், முருகேசன், ரமேஷ் ஆகியோர் திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்களது 1,020 நெல் மூட்டைகளை கடந்த 2018-ம் ஆண்டு ஈடாக வைத்து தங்களது நெல் மூட்டையின் மதிப்பில் இருந்து 50 சதவீத தொகையினை கடனாக பெற்று இருந்தனர்.

அதே ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி வீசிய கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயலினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேற்கூரை பெயர்ந்து உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சேதம் அடைந்தது.

வழக்கு

இதையடுத்து 4 விவசாயிகளும் வேறு வழியின்றி வெளி மார்க்கெட்டில் தங்களது நெல் மூட்டைகளை பாதி விலைக்கு விற்று உள்ளனர். மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கான வாடகை தொகை மற்றும் தாங்கள் ஈடாக கடன் பெற்ற தொகைக்கான வட்டி ஆகியவற்றை விவசாயிகள் முறையாக செலுத்தி உள்ளனர்.

இருப்பினும் திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கான உரிய காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத் தரவில்லை. இதனையடுத்து விவசாயிகள் 4 பேரும் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ரூ.4 லட்சத்து 69 ஆயிரம் இழப்பீடு

இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி லட்சுமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் அவர்கள் கூறியிருந்ததாவது:-

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாதி விலைக்கு நெல் மூட்டைகளை விற்ற தொகை போக மீதி தொகையை கொடுக்க எதிர் தரப்பினர் கடமைப்பட்டவர்கள் என்றும், இழப்பிற்கான காப்பீடு தொகையை வழங்காதது சேவை குறைபாடு எனவும் இந்த ஆணையம் கருதுகிறது.

எனவே நெல்மூட்டைகளுக்கான மதிப்பின் பாதி தொகையான ரூ.4 லட்சத்து 69 ஆயிரம் இழப்பீடாகவும், விவசாயிகளுக்கும் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு தலா ரூ.50 ஆயிரமும், மேலும் வழக்கு செலவு தொகையாக தலா ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர், திருவாரூர் விற்பனை குழு செயலாளர் மற்றும் கும்பகோணத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி கிளை மேலாளர் ஆகிய 3 பேரும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறியிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்