பஸ் வராததால் 4 கி.மீ. தூரம் நடந்தே சென்ற மாணவர்கள்
பெரும்பாறை அருகே பஸ் வராததால் 4 கி.மீ. தூரம் மாணவர்கள் நடந்து சென்றனர்.
வத்தலக்குண்டுவில் இருந்து தினந்தோறும் காலை 6.15 மணிக்கு தாண்டிக்குடிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் சித்தரேவு, நெல்லூர், அய்யம்பாளையம், மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, பெரும்பாறை, மங்களம்கொம்பு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர்.
இந்த பஸ்சில் தான் தாண்டிக்குடியில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். காலையில் இந்த பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை அந்த பஸ்சை எதிர்பார்த்து பெரும்பாறை அருகே மங்களம்கொம்புவில் பள்ளி செல்வதற்காக மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் பஸ் வரவில்லை. இதனால் காத்திருந்த மாணவர்கள் 4 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்கு சென்றனர். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ் அடிக்கடி இதுபோல் நிறுத்தப்படுவதால் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே நிரந்தரமாக இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.