செங்கல்பட்டு விபத்தில் 4 பேர் பலி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

செங்கல்பட்டு அருகே லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-05-16 08:18 GMT

சென்னை,

செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழமத்தூர் கிராமத்தின் எல்லைக்குட்பட்ட புக்கத்துறை கூட்டுசாலை அருகில் இன்று (16.05.2024) அதிகாலை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 53), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அகிலி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 30), சென்னை பட்சாலையைச் சேர்ந்த பிரவின் (வயது 24), மற்றும் அடையாளம் தெரியாத பெண் உட்பட நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்து, காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்