ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலி

Update: 2022-12-26 16:27 GMT


மடத்துக்குளம் அருகே வேனுடன் சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருமண நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த சோழமாதேவியை சேர்ந்தவர் சையது இப்ராஹிம். தனியார் மில் தொழிலாளி. இவருடைய மனைவி ஆஷிபா பானு (வயது 35). இவர்களுடைய மகன் இஸ்மாயில் (14), மகள் சஷ்மிதா (10). இவர்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பும், 5-ம் வகுப்பும் படித்தனர்.

சையது இப்ராஹிம் உறவினர் ஒருவரின் திருமணம் உடுமலையில் நடந்தது. இதில் சையது இப்ராஹிம் கலந்து கொள்ள முடியாததால் தனது குடும்பத்தினரை திருமணத்திற்கு ஒரு வேனில் அனுப்பி வைத்தார். அதன்படி ஒரு வேனில் சையது இப்ராஹிம் மனைவி ஆஷிபா பானு, இவர்களுடைய மகன் இஸ்மாயில், மகள் சஷ்மிதா, சையது இப்ராஹிமின் தாயார் ரசிதா பேகம் (55) ஆகியோர் சென்றனர். வேனை அதன் உரிமையாளரும், டிரைவருமான நரசிங்காபுரத்தை சேர்ந்த முத்து (57) என்பவர் ஓட்டினார்.

விபத்து

உடுமலையில் திருமண நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று மாலை 3 மணியளவில் அனைவரும் அதே வேனில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வேன் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நரசிங்காபுரம் பகுதியில் வந்தது. அப்போது வேனுக்கு முன்னாள் டிராக்டர் ஒன்று சென்றது. அந்த டிராக்டரை முந்தி செல்ல டிைரவர் முத்து முயன்றுள்ளார்.

அப்போது எதிரே வெள்ளரிக்காய் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று மடத்துக்குளத்தில் இருந்து ஆண்டியகவுண்டனூர் நோக்கி வந்தது. முத்து ஓட்டிச்சென்ற வேன் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது.

4 பேர் பலிஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலி

இந்த கோர விபத்தில் முத்து ஓட்டிச்சென்ற வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் சம்பவ இடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஆஷிபா பானு, ரஷிதா பேகம், சஷ்மிதா மற்றும் டிரைவர் முத்து ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய இஸ்மாயிலை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேன்-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்