4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
தூத்துக்குடியில் 4 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடியில் 4 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கனமழை, காற்று
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்கிழக்கு கடற்பகுதி, அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 31-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 245 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
மீன்பிடிக்க சென்றனர்
இந்நிலையில் விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் வழக்கமான முறையில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைபடகு மீனவர்கள் நேற்று அதிகாலை வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
பஸ் நிலையம்
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இதனால் இதமான சூழல் நிலவியது. தூத்துக்குடியில் பெய்த சாரல் மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.
தற்காலிக பஸ் நிலையம் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.