39,275 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி உதவித்தொகை

நாகை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 39, 275 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-31 18:45 GMT

நாகை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 39, 275 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓய்வூதிய திட்டம்

தமிழக அரசால் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், விதவை ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம் மற்றும் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் ஆகிய நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 ஆக வழங்கப்பட்ட உதவித்தொகை தற்போது ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம்

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம் பெற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும். ஊனத்தின் தன்மை 80 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டத்தில் உதவி தொகை பெற, ஊனத்தின் தன்மை 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருக்க வேண்டும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றை சமர்பித்து பயன்பெறலாம்.

ரூ.4 கோடிய 2 லட்சம் உதவி தொகை

இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற 60 வயதிற்கு மேற்பட்டவராகவும், விதவை ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற 40 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இத்திட்டங்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும், ஆதரவற்றவராக இருக்கவேண்டும்.

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண்,கணவரின் இறப்புச் சான்று, வறுமை கோட்டு பட்டியல் எண் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். நாகை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்த மாதம் வரை 39ஆயிரத்து 275 பயனாளிகளுக்கு உதவித் தொகையாக ரூ.4 கோடியே 2 லட்சத்து 14ஆயிரத்து 230 வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்