நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேக்கம்-சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு

நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேக்கமடைந்துள்ளதாகவும், நீதித்துறையில் புரட்சி, சீர்திருத்தங்கள் வர உள்ளதாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா தெரிவித்தார்.

Update: 2023-04-07 18:58 GMT

புதிய நீதிமன்றங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சார்பு நீதிமன்றம், பொன்னமராவதி, கறம்பக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என 3 புதிய கோர்ட்டுகள் திறப்பு விழா புதுக்கோட்டையில் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கோர்ட்டுகளை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிதாக தொடங்கப்பட்டுள்ள திருமயம் சார்பு நீதிமன்றத்திற்கு 882 வழக்குகளும், பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு 566 வழக்குகளும், கறம்பக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு 446 வழக்குகளும் மாற்றப்பட்டுள்ளன. வருகிற 10-ந் தேதி முதல் (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

4 கோடி வழக்குகள் தேக்கம்

40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல் நீதிமன்றங்கள் தற்போது இல்லை. நீதி பகிர்ந்து செய்யும் முறை என்பது நமக்கு சொந்தமான துறை இல்லை. ஆங்கிலேயர்கள் நாட்டில் இருந்து பெறப்பட்ட ஒரு பழக்க வழக்கம். ஆனால் அவர்கள் இன்று மாறி வருகிறார்கள். நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 3½ கோடி முதல் 4 கோடி வழக்குகள் தேங்கி இருக்கின்றன. ஒரு வழக்கு தீர்ப்புக்கு பின் மேல் முறையீடு செய்யப்படுகிறது. ஒரு வழக்கிற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகிறது. இந்த காலத்தை ஏன் குறைக்க கூடாது? என்று கேட்க வேண்டிய கேள்வி எழுந்துள்ளது.

கோர்ட்டுகளில் வக்கீல்கள் வாதாடும் போது அதிகமாக 3 முதல் 5 நிமிடங்களுக்குள் வாதாடி முடிக்க வேண்டும். இதில் ரத்தின சுருக்கமாகவும், தெளிவாகவும் நீதிமன்றத்தில் எடுத்து கூறினால் விரைவாக நீதியை பெற முடியும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 23 நீதிமன்றங்கள் இருந்த நிலையில் தற்போது புதிதாக 3 நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளதால் 26 ஆக உயர்ந்துள்ளது. வணிக கோர்ட்டு புதுக்கோட்டையில் வர உள்ளது.

சட்டங்கள் மாறி வருகின்றன

நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆன்லைன் முறை, இ-பைலிங், காணொலியில் வழக்கு விசாரணை என்ற வசதி உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் வாதாடலாம். இந்த வசதிகளை வக்கீல்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும். இன்னும் 2 ஆண்டுகளில் நீதித்துறையில் புரட்சி நடக்க உள்ளது. சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

காகிதம் இல்லாத முறையையும் கொண்டு வரப்பட உள்ளது. 4 கோடி வழக்குகளை எப்படி தீர்த்து வைப்பது என நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டங்கள் மாறி வருகின்றன. அதனை வக்கீல்கள் தெரிந்திருக்க வேண்டும்.

நீதிபதிகளின் கடினமான கேள்விகளுக்கு வக்கீல்கள் கோபத்துடன் பதில் அளிக்க கூடாது. கோபம் இல்லாமல் பதில் அளித்தால் வெற்றிக்கு வழி வகுக்கும். கோபத்தை வீட்டில் இருந்தே வக்கீல்கள் குறைத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முதன்மை மாநிலம்

விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''கடந்த 2022-ம் ஆண்டில் தமிழகம் நீதி நிர்வாகம் மற்றும் சிறைத்துறையில், உயர்நீதிமன்றத்தின் முழு ஒத்துழைப்பின் மூலம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. நீதிமன்றங்கள் கட்டமைப்புகள் மிக சிறப்பாக இருக்கும் மாநிலமாக தமிழகம் திகழும். வக்கீல்களின் சேம நல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது நிதி நிலைமை சரியில்லாததால் அதனை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. நிதி நிலைமை சரியானதும் வக்கீல்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

2 தாலுகா நீதிமன்றங்கள்

விழாவில் சென்னை ஐகோா்ட்டு நீதிபதி சுரேஷ்குமார் பேசுகையில், ''மணமேல்குடி, ஆவுடையார்கோவிலில் தாலுகா நீதிமன்றங்கள் அமைக்க அனுமதி கிடைத்த நிலையில் கட்டிட அமைப்பு கிடைத்ததும் தொடங்கப்படும். புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்'' என்றார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், புதுக்கோட்டை மாவட்ட (பொறுப்பு) நீதிபதியுமான சுந்தர், மாவட்ட கலெக்டர் கவிதாராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் வரவேற்று பேசினார். முடிவில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமாரி ஜெமி ரத்னா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்