தனியார் காப்பகத்தில் இருந்து தப்பிய 4 சிறுவர்கள்

தனியார் காப்பகத்தில் இருந்து தப்பிய 4 சிறுவர்களை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

Update: 2023-05-31 12:18 GMT

வேலூர் வள்ளலார் மாருதிநகரில் காலை 6 மணியளவில் 10 வயதுக்கு உட்பட்ட 2 சிறுவர்கள், 2 சிறுமிகள் சுற்றித்திரிந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அவர்களிடம் பெயர், வீட்டின் முகவரி உள்ளிட்டவற்றை விசாரித்தனர். ஆனால் சிறுவர், சிறுமிகள் சரியாக பதில் தெரிவிக்கவில்லை. இதையடுத்து பொதுமக்கள் இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று சிறுவர், சிறுமிகளை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அவர்கள் 4 பேரும் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்தவர்கள் என்பதும், அங்கிருந்து நேற்று காலை வெளியேறி எங்கு செல்வது என்று தெரியாமல் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிறுவர்களுக்கு காலை உணவு வாங்கிக் கொடுத்து பின்னர் இதுகுறித்து குழந்தைகள் காப்பக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிர்வாகிகள் அங்கு சென்று குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருப்பதற்கான ஆதாரங்களை காண்பித்தனர். அதன்பேரில் 4 சிறுவர்களையும் தனியார் காப்பக நிர்வாகிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்