4 அரசு பள்ளிகளில் சமையல் கூடம்

காலை சிற்றுண்டி திட்டத்துக்கு 4 அரசு பள்ளிகளில் சமையல் கூடம் கட்ட வால்பாறை நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-03-27 18:45 GMT

வால்பாறை

காலை சிற்றுண்டி திட்டத்துக்கு 4 அரசு பள்ளிகளில் சமையல் கூடம் கட்ட வால்பாறை நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சி கூட்டம்

வால்பாறையில் நகராட்சி மன்ற கூட்டம், தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையிலும், துணைத்தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் பாலு முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பேசியதாவது:-

வாட்டர் பால்ஸ் எஸ்டேட் ரோப்வே பகுதியில் காட்சி முனை மாடம் அமைக்க வேண்டும். அனைத்து வார்டு பகுதியிலும் வளர்ச்சி பயணிகளை மேற்கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளை பராமரிப்பு செய்து தர வேண்டும். தெருவிளக்கு பராமரிப்பு பணியை கூடுதல் மின் பணியாளர்களை பணியமர்த்தி தடையின்றி மேற்கொள்ள வேண்டும்.

வருகிற மே மாதம் கோடைவிழா நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்து யானைகள் சேதப்படுத்திய சத்துணவு மையங்களை சரி செய்து தர வேண்டும். நகராட்சி மார்க்கெட் கடைக்காரர்களின் வாடகை, பொதுமக்களின் வீட்டு வரியை 50 சதவீதம் குறைக்க வேண்டும்.

நல்லமுடிபூஞ்சோலை சுற்றுலா தலத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடம், கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினரால் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

மாணவர்களுக்கு பாராட்டு

பின்னர் நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார் கூறும்போது, அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் நகர் பகுதியில் பல்வேறு தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் பாராட்டுக்கள். நகராட்சி கால்பந்தாட்ட மைதானத்தை நவீனப்படுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். நகராட்சி மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி கூறுகையில், சாலையோரத்தில் கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று இடத்தில் கடை நடத்த இடம் ஒதுக்கவும், வார்டு கவுன்சிலர்கள் மன்றத்தில் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தீர்மானம்

இதையடுத்து வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி, வாட்டர் பால்ஸ் அரசு உயர்நிலைப்பள்ளி, சோலையாறு நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்துக்கு சமையல் கூடம் கட்டுதல், திடக்கழிவு மேலாண்மை திட்ட விரிவாக்க பணியை மேற்கொள்ளுதல், தடுப்பு சுவர் கட்டுதல், கழிப்பிட பராமரிப்பு, சத்துணவு மைய பராமரிப்பு, சிறுபாலம் கட்டுதல், கிணறு அமைத்தல், கழிவுநீர் வடிகால் அமைத்தல், குடிநீர் குழாய் பராமரிப்பு செய்தல், பயணிகள் நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்