பைனான்சியர் தற்கொலை வழக்கில் 4 பேர் கைது

செய்யாறில் பைனான்சியர் தற்கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-01 17:43 GMT

தூசி

செய்யாறில் பைனான்சியர் தற்கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பைனான்சியர் தற்கொலை

செய்யாறு டவுன் கொடநகர் அறிஞர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு என்கிற மணி (வயது 26), பைனான்சியர். இவரது மனைவி ரூபிணி (26). இவர்களுக்கு ஒரு வயதில் கிருத்திக் என்ற மகன் உள்ளான்.

செய்யாறு அருகே மாங்கால் கூட்ரோட்டில் திருநாவுக்கரசு தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதில் செய்யாறு தாலுகா பெருங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் மகன் அன்பு என்பவர் பங்குதாரராக இருந்தார்.

அந்த நிறுவனத்தில் இருந்து அப்பு விலகிக் கொண்டதால் அவரது பங்குத்தொகையை கேட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அன்பு, அவரது தம்பி நடேசன் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் திருநாவுக்கரசிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நிதி நிறுவனத்தை பூட்டி சென்றனர்.

மேலும் அவர்கள் பணத்தை கொடுத்துவிட்டு சாவியை வாங்கிக்கொள் என்று தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த திருநாவுக்கரசு கடந்த 29-ந்தேதி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

4 பேர் கைது

இதனால் ஆத்திரம் அடைந்த திருநாவுக்கரசின் உறவினர்கள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தற்கொலைக்கு காரணமான அன்பு (27), அரசங்குப்பத்தை சேர்ந்த ஆதவன் (21) மற்றும் 19 வயதுடைய 2 வாலிபர்கள் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்