கல்வீசி பஸ் கண்ணாடிகளை உடைத்த 4 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் கல்வீசி பஸ் கண்ணாடிகளை உடைத்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-07-08 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

பஸ்மீது கல்வீச்சு

உளுந்தூர்பேட்டை அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமாரமங்கலம் காப்புக்காடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக சென்ற சுமார் 12-க்கும் மேற்பட்ட பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசி கண்ணாடிகளை உடைத்தனர். காப்புக்காடு பகுதி என்பதால் டிரைவர்கள் அந்த பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துவிட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் பெரும் அச்சம் அடைந்தனர். இதை அடுத்து பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால் மற்றும் அலெக்ஸ் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

செல்போன் அழைப்புகளை ஆய்வு

தனிப்படை போலீசார் சம்பம் நடந்த பகுதியில் உள்ள செல்போன் டவர்களின் மூலமாக வந்த அழைப்புகளை சேகரித்து, சந்தேகம் படும்படியான 7 பேரை உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தை சேர்ந்த குமரேசன் (வயது33), ஜோதி(28), சந்துரு(22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேர் பஸ்கண்ணாடி உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். உடனே தனிப்படை போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது, குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த தங்களது நண்பர் ஒருவர் இந்த பகுதியில் விபத்தில் சிக்கிய உயிரிழந்ததால், நாங்கள் அனைவரும் குடிபோதையில் இருக்கும் பொழுது நண்பனின் ஞாபகம் அதிகமாகும் போது சாலையோரம் மறைந்திருந்து அந்த வழியாக செல்லும் பஸ்களின் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்ததாகவும், இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசாருக்கு அளித்த வாக்கு மூலத்தில் அவர்கள் தெரிவித்தனர்.

4 பேர் கைது

இதையடுத்து குமரேசன் உள்பட 4 பேரையும் கைது செய்த போலீசார் இவர்கள் கொடுத்த தகவலின் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்