ஆன்லைன் மூலம் கடன் வாங்கி தருவதாக பண மோசடி;4 பேர் கைது

போலியாக இன்சூரன்சு நிறுவனம் தொடங்கி ஆன்லைன் மூலம் கடன் வாங்கி தருவதாக பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட 4 பேரை திருவாரூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-29 19:00 GMT

போலியாக இன்சூரன்சு நிறுவனம் தொடங்கி ஆன்லைன் மூலம் கடன் வாங்கி தருவதாக பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட 4 பேரை திருவாரூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

மோசடி புகார்

திருவாரூர் மாவட்டம் ஜாம்புவானோடை பகுதியை சேர்ந்தவர் உதயமூர்த்தி. கேபிள் டி.வி. ஆபரேட்டர். காட்டூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த விவசாயி இலக்கியதாசன் ஆகியோர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் தனித்தனியாக புகார் மனு அளித்தனர்.

அந்த புகார்களில் அவர்கள், ஆன்லைன் மூலமாக வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி தங்களிடம் பணம் மோசடி நடந்து இருப்பதாக கூறி இருந்தனர்.

போலி நிறுவனம்

இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆன்லைன் மூலமாக கடன் வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த கோபிகிருஷ்ணன்(வயது 32) என்பவர் போலியான இன்சூரன்சு நிறுவனத்தை தொடங்கி பணியாட்களை நியமித்துள்ளார். அவர்கள் செல்போன் மூலம் பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு கடன் பெற்று தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர். மேலும் கடன் பெற்றுத்தருவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் நிறுவனத்துக்கு தர வேண்டும் என கூறி உள்ளனர். இதை நம்பி பலரும் பணம் செலுத்தி உள்ளனர்.

பெண்கள் மூலம்...

கோபிகிருஷ்ணனுக்குஉதவியாக திருவாரூர் அலிவலம் புதுத்தெருவை சேர்ந்த ஸ்டாலின்(33), திருவள்ளூர் ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த நடராஜன்(22), சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சுரேஷ்(34) ஆகிய 3 பேரும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள், பெண் பணியாளர்கள் மூலம் செல்போனில் பொதுமக்களிடம் பேசி, கடன் பெற விருப்பம் தெரிவித்தவர்களிடம் பணம் வசூலித்து, கடன் வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்..

72 செல்போன்கள் பறிமுதல்

இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட கோபிகிருஷ்ணன், ஸ்டாலின், நடராஜன், சுரேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.99 ஆயிரத்து 854, கணினி, மடிக்கணினி, 72 செல்போன்கள், 89 சிம் கார்டுகள், 21 கடன் அட்டைகள், 21 காசோலை புத்தகங்கள் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளனர்.

ஆன்லைன் மோசடி வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்களை திருச்சி மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரிடம் வழக்கு விவரங்களை கேட்டறிந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்