அரிவாள் வடிவ 'கேக்' வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேர் கைது
பேரளத்தில், அரிவாள் வடிவ ‘கேக்’ வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பேரளத்தில், அரிவாள் வடிவ 'கேக்' வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அரிவாள் வடிவத்தில் 'கேக்'
திருவாரூர் மாவட்டம் பேரளம் வாய்க்காங்கரை தெரு பகுதியை சேர்ந்த முருகன் மகன் மாதவன். சம்பவத்தன்று இவர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து பேரளம் திருவாரூர்-மயிலாடுதுறை நெடுஞ்சாலை பகுதி பஸ் நிறுத்தத்தில் கொண்டாடினார். அப்போது அவர்கள் அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை வெட்டி கொண்டாடி உள்ளனர்.
மேலும் இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவியது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அரிவாள் வடிவம் கொண்ட கேக் வெட்டப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
4 பேர் கைது
இந்த நிலையில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை வெட்டியது தொடர்பாக பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக பேரளம் பகுதியை சேர்ந்த அஜய்குமார் (வயது 27), வஸ்திரராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(19), ஆலத்தூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு(19), தூத்துக்குடியை சேர்ந்த பிரசாத்(36) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 பேருக்கு வலைவீச்சு
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மாதவன், மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.