3-வது மின்இழுவை ரெயிலை இயக்கி சோதனை

பழனி முருகன் கோவிலில் 3-வது மின்இழுவை ரெயிலில் ஒரு பெட்டியை மட்டும் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-12 21:00 GMT

3-வது மின்இழுவை ரெயில்

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர 2 மின்இழுவை ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பழனி முருகன் கோவிலுக்கு குளிர்சாதன வசதி, டி.வி. உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய 3-வது மின்இழுவை ரெயிலுக்கு 2 பெட்டிகள் வாங்கப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 72 பேர் பயணம் செய்யலாம்.

இந்த ரெயில் பெட்டிகளை, 3-வது தண்டவாளத்தில் பொருத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. முதற்கட்டமாக பெட்டிகளுக்கு ஏற்றவாறு மின்இழுவை ரெயில் நிலைய நடைமேடை பகுதி சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் பொருத்தும் பணி நடந்தது.

சோதனை ஓட்டம்

இந்நிலையில் இந்த ரெயிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து பிரத்யேக 'சாப்ட்டு' வரவழைக்கப்பட்டது. இந்த 'சாப்ட்டு'கள் பொருத்தும் பணி நிறைவு அடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று 3-வது மின்இழுவை ரெயிலில் ஒரு பெட்டியை மட்டும் இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது ரோப்பின் இழுவைத்திறன், பெட்டியின் நகர்வு தன்மை, தண்டவாள தன்மை ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது, பழனி முருகன் கோவிலில் நவீன வசதிகள் கொண்ட 3-வது மின்இழுவை ரெயில் சேவை தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதாவது நேற்று, புதிய சாப்ட்டு பொருத்தி ஒரு பெட்டியை மட்டும் இயக்கி சோதனை செய்தோம். விரைவில் 2 பெட்டிகளையும் இணைத்து, அதில் எடைக்கற்கள் வைத்து சோதனை செய்ய உள்ளோம். தொடர்ந்து தொழில்நுட்ப குழுவினர் ஆய்வுக்கு பின் இறுதிகட்ட சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்