அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் 3-வது சோமவார விழா

அய்யர்மலைரெத்தினகிரீசுவரர் கோவிலில் 3-வது சோமவார விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு நடந்தது.

Update: 2022-12-05 18:45 GMT

சோமவார விழா

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ‌ரெத்தினகிரீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கார்த்திகை சோமவார விழா நடைபெறுவது வழக்கம். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மக்கள் விரதம் இருப்பதுபோல, இந்த சோமவார தினத்தன்றும் சிவபெருமானை வேண்டி விரதம் இருந்து மலையேறி அவரை தரிசனம் செய்துவந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதன்காரணமாக இங்கு நடைபெறும் சோமவார தினத்தன்றும் பல்வேறு ஊர்களில் இருந்து மட்டுமல்லாமல், பல மாவட்டங்களில் வசிக்கும் இக்கோவில் குடிபாட்டுக்காரர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து மலைமேல் வீற்றிருக்கும் ரெத்தினகிரீசுவரரை வழிபட்டு செல்வார்கள். அதுபோல இந்தாண்டு இக்கோவிலில் முதல் சோமவாரம் கடந்த நவம்பர் மாதம் 21-ந் தேதி தொடங்கியது.

தேங்காய் உடைத்து வழிபாடு

இந்தநிலையில் 3-வது சோமவார விழாவான நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குளித்தலை பகுதியை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் நேற்று இக்கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் தங்களின் விரதத்தை முடிப்பதற்காக 1017 படிகள் கொண்ட இக்கோவிலின் மலை அடிவாரத்தில் உள்ள பாறைகளில் தாங்கள் கொண்டுவந்த பூ, வாழைப்பழங்கள், மாவிளக்கு உள்பட பல பொருட்களை வைத்து தேங்காய் உடைத்து சாமியை வழிபட்டனர்.

பலர் தங்களது விளைநிலங்களில் பயிரிட்டு அறுவடை செய்த நெல், கடலை, மிளகாய், கம்பு உள்பட பல பொருட்களை கொண்டு வந்து கோவில் படிகட்டுகள், மலையை சுற்றி கொட்டி வழிபட்டனர். மேலும் நேற்று இக்கோவிலுக்கு வந்து வழிபட்ட பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்த காரணத்தால், குளித்தலை போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பசுபதீஸ்வரர் கோவில்

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை 3-வது சோமவார விழாவை முன்னிட்டு கரூர் நகரத்தார் சங்கம் சார்பில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஹோமகுண்டம் வளர்க்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

ஆளவந்தீஸ்வரர் கோவில்

கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டத்தில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று கார்த்திகை மாத 3-வது சோமவார விழாவையொட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 108 சங்குகளை சிவன் வடிவத்தில் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்