தம்மம்பட்டியில் பரபரப்பு: வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3,800 மது பாட்டில்கள் பறிமுதல்-பெட்டி, பெட்டியாக இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி
தம்மம்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 3 ஆயிரத்து 800 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை பெட்டி, பெட்டியாக இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தம்மம்பட்டி:
மதுபாட்டில்கள் பதுக்கல்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி 2-வது வார்டு காந்திநகர் பகுதியில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உதவி கலெக்டர் சரண்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர், தாசில்தார் வெங்கடேசனை தொடர்பு கொண்டு, மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வீட்டில் சோதனை நடத்துமாறு உத்தரவிட்டார்.
உடனே தாசில்தார் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது.
பெட்டி... பெட்டியாக...
அதாவது, பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதுவும், அரசு டாஸ்மாக் கடையில் விற்பனைக்காக வைக்கப்படுவது போன்று அந்த பெட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதனை பறிமுதல் செய்த தாசில்தார் வெங்கடேசன் அதனை தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த பெட்டிகளில் 3 ஆயிரத்து 840 மதுபாட்டில்கள் இருந்தன.
இதுதொடர்பாக அந்த வீட்டில் தங்கி இருந்த கலைச்செல்வன் (34) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பரபரப்பு தகவல்கள்
விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
குடியரசு தின விழாவையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. எனவே நேற்று முன்தினம் இரவே ஏதோ டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்கள் பெட்டி, பெட்டியாக தம்மம்பட்டி காந்திநகர் பகுதியில் தங்கம்மாள் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நேற்று விடுமுறை நாளில் சந்துக்கடையாக அங்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்ய ஏற்பாடு நடந்துள்ளது தெரிய வந்தது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொடர்பு?
இவ்வளவு மதுபாட்டில்களை அவர்களுக்கு விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் டாஸ்மாக் ஊழியர்களே, சந்துக்கடையில் மது விற்பனை செய்ய இதுபோன்ற மோசடி நடவடிக்கையில் இறங்கினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் கைதான கலைச்செல்வன் டிரைவர் என்பதும், அவரை இரவு மட்டும் மதுபாட்டில்களுக்கு காவலாக தங்க வைத்திருந்ததாகவும் தெரிகிறது. அவர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் மதுபாட்டில்கள் பதுக்கிய விவகாரத்தில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.