தென்காசி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 3.80 லட்சம் பேர் விண்ணப்பம்

தென்காசி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 3.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பேசினார்.;

Update: 2023-09-13 19:00 GMT

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 3.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பேசினார்.

மனுநீதி நாள் முகாம்

கடையநல்லூர் அருகே உள்ள கொடிக்குறிச்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, 86 பயனாளிகளுக்கு ரூ.5.63 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் மகளிர் உதவித்தொகை கோரி 3.80 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அதை சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. 1.90 லட்சம் பேரின் மனுக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை 8 ஆயிரம் ஏ.டி.எம். கார்டுகள் வரப்பெற்றுள்ளன. வருகிற வெள்ளிக்கிழமை தென்காசி ஐ.சி.ஐ. பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்குகிறார். ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இத்தொகை வரவு வைக்கப்படும்.

மக்கள் ஒத்துழைப்பு

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தண்ணீரை நீண்ட நாள் சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் லாவண்யா, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சுபாஷினி பல்வேறு துறை அதிகாரிகள், ஒன்றிய பெருந்தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்