மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 372 பேர் கைது

Update: 2022-08-30 19:39 GMT

மத்திய அரசை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் 13 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 372 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டம்

அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி, மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டங்கள் நேற்று நடைபெற்றன. திருச்சி மாவட்டத்தில் 13 இடங்களில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகரில் நந்திகோவில் தெருவில் இருந்து மாநகர் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் உள்பட பலர் தெப்பக்குளம் தபால் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்று மறியல் செய்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 37 பெண்கள் உள்பட 91 பேரை அங்கு பாதுகாப்புக்கு இருந்த கோட்டை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ரெயில் மறியல்

சமயபுரம் நெ.டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் ெரயில் நிலையத்தில் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் ெரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

முசிறி-லால்குடி

முசிறியில் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

லால்குடியில் ஒன்றிய செயலாளர் மார்ட்டின் தலைமையில் லால்குடி ரவுண்டானாவில் திருச்சி- சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டவர்களை லால்குடி போலீசார் கைது செய்தனர்.

உப்பிலியபுரம்-தா.பேட்டை

உப்பிலியபுரத்தில் ஒன்றிய செயலாளர் மருதை தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 28 பேரை உப்பிலியபுரம் போலீசார் கைது செய்தனர்.

தா.பேட்டையில் நடந்த மறியல் போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சரத்குமார் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 22 பேரை தா.பேட்டை போலீசார் கைது செய்தனர்.

திருவெறும்பூர்

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி முதல் பால்பண்ணை வரை சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 14 பெண்கள் உட்பட 34 பேரை துவாக்குடி போலீசார் கைது செய்தனர்.

மணப்பாறை

மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகரம், ஒன்றியம் குழு சார்பில் திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு வங்கி முன்பு மறியல் செய்ய முயன்ற 34 பேரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர்.

372 பேர் கைது

மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் மொத்தம் 372 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்