சென்னையில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை - ஐகோர்ட்டில் கல்வித்துறை அறிக்கை தாக்கல்

சென்னை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1,434 பள்ளிகளில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் கல்வித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Update: 2022-08-24 11:48 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், "மாநிலம் முழுவதும் உள்ள பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. கல்விக்கு இணையாக விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விளையாட்டு மைதானம் மட்டுமல்லாமல், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது. சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது,

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 1,434 பள்ளிகள் உள்ளன. அதில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. அந்த பள்ளி மாணவர்கள், அருகே உள்ள பொது விளையாட்டு மைதானங்களை பயன்படுத்துகின்றனர்.

அதேபோல, 1,434 பள்ளிகளில் கழிவறை வசதிகள் இருந்தாலும், அதில் 21 பள்ளிக்கூடத்தில் குடிநீர் வசதி இல்லை. 290 பள்ளிகளில் கழிவறையில் குப்பைத்தொட்டி இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்