தஞ்சை பெரியகோவிலை '360 டிகிரி' கோணத்தில் சுற்றிப்பார்க்கும் வசதி
தஞ்சை பெரியகோவிலை 360 டிகிரி கோணத்தில் இருந்த இடத்தில் இருந்தே சுற்றிப்பார்க்க வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலில் ஆய்வு செய்தனர்.
தஞ்சை பெரியகோவிலை 360 டிகிரி கோணத்தில் இருந்த இடத்தில் இருந்தே சுற்றிப்பார்க்க வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலில் ஆய்வு செய்தனர்.
தஞ்சை பெரிய கோவில்
தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது தஞ்சை பெரியகோவில். தமிழர்களின் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் இந்த கோவிலை சுற்றிப்பார்க்க உலகம் முழுவதிலும் இருந்தும் மக்கள் வருகிறார்கள். அற்புதமான கட்டிட கலை அம்சத்தை கொண்ட இந்திய கோவில்களில், தஞ்சை பெரிய கோவிலுக்கு தனி இடம் உண்டு.
எவ்வித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத காலத்திலேயே மாமன்னன் ராஜராஜசோழனால் இக்கோவில் வியத்தகு வகையில் கட்டப்பட்டுள்ளது. கி.பி. 1,004-ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகளில் அதாவது கி.பி. 1,010-ல் முழுமையாக இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
அங்கீகாரம்
தஞ்சை பெரியகோவில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது. தமிழ் கலாசாரத்தின் கவுரவ சின்னமாக திகழும் தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகிஅம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், சண்டிகேஸ்வரர், கருவூரார், நடராஜர் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேலும் நந்தியெம்பெருமானுக்கு பெரிய சிலையும் உள்ளது.
சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு
தஞ்சை பெரியகோவிலில் செல்கின்றனர். விடுமுறை தினங்களில் தஞ்சை பெரியகோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு மாற்றுத்திறனாளிகள் எந்த வித சிரமம் இன்றி நேரடியாக சிவனை தரிசக்க எந்த ஒரு வசதியும் இது வரை இல்லை.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் மணிக்கணக்கில் காத்திருக்காமல், சிரமம் இன்றி சிவனை வழிபட ஏற்பாடு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருன்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
360 டிகிரி கோணத்தில்
மேலும் பெரிய கோவிலை மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் இருந்த இடத்தில் இருந்தே 360 டிகிரி கோணத்தில் சுற்றி பார்க்கும் வசதியை ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான வசதியை திருச்சுற்று மாளிகை தென் புறத்தில் ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது தொல்லியல் துறை துணை கண்காணிப்பு பொறியாளர் பரணிதரன், உதவி கண்காணிப்பு பொறியாளர் கலைச்செல்வன், தொல்லியர் துறை ஆய்வாளர் முத்துக்குமார், பராமரிப்பு அலுவலர் சங்கர், சீதாராமன், செயல் அலுவலர் மாதவன், சூப்பிரண்டு செந்தில்குமார், பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பார்த்து ரசிக்கலாம்
ஒரே இடத்தில் நின்றபடி நமது இடது புறம், வலது புறம், மேலே வானம், கீழே பூமி என அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி பார்ப்பது தான் 360 டிகிரி கோணம் ஆகும். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களை எங்கு இருக்கிறோமோ, அங்கிருந்தபடியே 360 டிகிரி கோணத்தில் சுற்றிப்பார்க்கும் வகையில் புதிய வசதி தொடங்கப்பட உள்ளது.
தஞ்சை பெரியகோவிலுக்குள் நுழைந்ததும் நம் கண் எதிரே இருக்கும் சாமி சிலையில் ஆரம்பித்து பிரகாரங்களை சுற்றுவது, கோபுர தரிசனம், கொடிமரம், மூலவர் அறை, உற்சவர், திருச்சுற்று மண்டபம் நந்தி சிலை என அனைத்தையும் இந்த 360 டிகிரி கோணத்தின் மூலம் பார்த்து ரசிக்கலாம். இதற்காக தற்போது திருச்சுற்று மாளிகை தென்புறத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லியில் தலைமை இடத்தில் முறைப்படி அனுமதி பெற்று, அதன் பிறகு பணிகள் தொடங்கி நடைமுறைப்படுத்துவோம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.