36 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை

தொடர் விடுமுறையையொட்டி ஆழியாறு, டாப்சிலிப், குரங்கு நீர்வீழ்ச்சிக்கு கடந்த 4 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

Update: 2023-10-24 19:30 GMT

தொடர் விடுமுறையையொட்டி ஆழியாறு, டாப்சிலிப், குரங்கு நீர்வீழ்ச்சிக்கு கடந்த 4 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

தொடர் விடுமுறை

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகளையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு, டாப்சிலிப் சுற்றுலா தலங்களில் உள்ள இயற்கை அழகை ரசிக்கவும், வனவிலங்குகளை பார்த்து மகிழவும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்திருந்தனர்.

இதன் காரணமாக பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் வனத்துறை தங்கும் விடுதிகள் முன்பதிவு கடந்த வாரமே நிறைவடைந்து விட்டது. ஆழியாறு அணை மற்றும் பூங்காவை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்தனர். மேலும் அணையில் படகு சவாரி செய்தும், குடும்பத்துடன் செல்பி புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். முன்னதாக சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று நுழைவு சீட்டு பெற்றனர்.

சுற்றுலா பயணிகள்

மேலும் குரங்கு நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்டனர். இதற்கிடையில் வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்வதை தடுக்க வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நீர்வீழ்ச்சி பகுதியில் அத்துமீறிய சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஆழியாறு அணை, வனத்துறை சோதனைச்சாவடி பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் டாப்சிலிப்பிற்கு கடந்த 4 நாட்களாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு சென்ற சுற்றுலா பயணிகள் யானைகளுக்கு உணவு வழங்குவதை பார்த்து ரசித்தனர். ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, டாப்சிலிப்பிற்கு 36 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

படகு சவாரி

இதேபோல் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்தனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் அங்குள்ள தாவரவியல் பூங்கா திறந்து விடப்பட்டது. அங்குள்ள நகராட்சி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். வண்ண விளக்குகளுடன் செயல்பட்ட நீரூற்றை பார்வையிட்டனர். தாவரவியல் பூங்காவை சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் வால்பாறை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்