மதுரையில் ஒரே நாளில் கஞ்சா, புகையிலை விற்றதாக 36 பேர் கைது
மதுரையில் ஒரே நாளில் கஞ்சா, புகையிலை விற்றதாக 36 பேர் கைது செய்யப்பட்டனர்;
மதுரையில் கஞ்சா, போதை பாக்கு, புகையிலை போன்றவை விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் அனைத்து போலீஸ் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தெப்பக்குளம், கீரைத்துறை, திலகர்திடல், திடீர்நகர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் அரசு தடை செய்த போதை பாக்கு, புகையிலை விற்றதாக 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது தவிர எஸ்.எஸ்.காலனி, திருப்பரங்குன்றம், கரிமேடு ஆகிய பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதன் மூலம் ஒரே நாளில் போதை பாக்கு, புகையிலை, கஞ்சா விற்ற 36 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சோதனை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.