ரூ.36½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

சங்ககிரி அருகே கத்தேரி ஊராட்சியில் நடந்த மக்கள் சந்திப்பு முகாமில் 332 பயனாளிகளுக்கு ரூ.36½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.;

Update: 2022-11-09 19:30 GMT

தேவூர்:-

சங்ககிரி அருகே கத்தேரி ஊராட்சியில் நடந்த மக்கள் சந்திப்பு முகாமில் 332 பயனாளிகளுக்கு ரூ.36½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்

சங்ககிரி அருகே கத்தேரி ஊராட்சியில் நேற்று மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடந்தது. இதில், கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதைத்தொடர்ந்து கத்தேரி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு ஊராட்சியை தேர்ந்தெடுத்து அந்த ஊராட்சியில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் அலுவலர்கள் நேரடியாக சென்று பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கான தீர்வுகளை வழங்கி வருகிறோம். அதன்படி, கத்தேரி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாமில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள்.

அடிப்படை வசதிகள்

கத்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட கத்தேரி ஆதிதிராவிடர் தெரு, நாடார் தெரு, பள்ளிக்காடு, சாமியம்பாளையம் அருந்ததியர் தெரு உள்ளிட்ட 34 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்.

மேலும் குடிநீர், சாலை வசதிகள், பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதற்கு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கத்தேரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு முகாமில் பெறப்பட்ட கோரிக்கைகள் மீது அதன் சாத்தியக்கூறுகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

332 பயனாளிகளுக்கு

நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, இலவச சலவைப்பெட்டி, ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ரூ.36.65 லட்சம் மதிப்பில் 332 பயனாளிகளுக்கு கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் எஸ்.சுந்தரராஜன் எம்.எல்.ஏ. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சங்ககிரி உதவி கலெக்டர் சவும்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் புருசோத்தமன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சிங்காரம், தாசில்தார் பானுமதி, சங்ககிரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சிவக்குமாரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சாந்தாமணி ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் துரைசாமி, கத்தேரி ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்செல்வி உள்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

----

---

Image1 File Name : 13803101.jpg

----

Reporter : M.Senthilmurugan_Staff Reporter Location : Salem - Salem

Tags:    

மேலும் செய்திகள்