தனியார் நிதி நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகள் முடக்கம்

தனியார் நிதி நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகள் முடக்கம்

Update: 2023-06-28 18:45 GMT

கோவை

ரூ.1,300 கோடி மோசடி வழக்கில் தனியார் நிதி நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். மேலும் இந்த வழக்கில் 7 பேரை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நிதி நிறுவனம்

கோவை அடுத்த சூலூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் கோவை பீளமேட்டில் யு.டி.எஸ். என்ற நிதி நிறுவனத்தை கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கினார். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி உள்பட பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிடப்பட்டது.

இதனை நம்பிய ஏராளமான பொதுமக்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை, மதுரை, திருச்சி என தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் இந்த நிதி நிறுவனத்தின் கிளைகள் தொடங்கப்பட்டன.

இந்த நிதி நிறுவனத்தில் சுமார் 76 ஆயிரம் பேர் ரூ.1,300 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களின் முதலீட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் அவர் மோசடி செய்தார்.

தனிப்படை அமைப்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த துணை போலீஸ் சூப்பிரண்டு முருகானந்தம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், லட்சுமி, மகேஸ்வரி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ரமேஷ் கடந்த 6-ந் தேதி கோவை டேன்பிட் கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த நிலையில் அந்த நிதி நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கி உள்ளதுடன், ரூ.4 கோடி மதிப்பிலான வீடு, இடம் உள்ளிட்ட சொத்துக்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 7 பேரை கைது செய்ய திட்டம்

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- யு.டி.எஸ். நிறுவன நிதி மோசடி தொடர்பாக இதுவரை 90 பேர் வரை மட்டுமே புகார் அளித்து உள்ளனர். கோர்ட்டில் சரண் அடைந்து உள்ள ரமேசை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளோம். அந்த நிதி நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகளை இதுவரை முடக்கி உள்ளோம். இதில் 2 வங்கி கணக்கில் இருந்த ரூ.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் ராமேஷ்க்கு உதவியாக இருந்த 7 பேரை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமாக 10 இடங்களில் வீடு, நிலம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவற்றின் அரசு வழிகாட்டு மதிப்பு மதிப்பு ரூ.4 கோடி ஆகும்.

இதனை கையகப்படுத்தக்கோரி அரசிற்கு பரிந்துரை செய்து உள்ளோம். இதையடுத்து அரசு ஆணை பிறப்பித்ததும் இந்த சொத்துக்களை மாவட்ட வருவாய் அதிகாரி கையகப்படுத்தி கோர்ட்டில் அனுமதி பெற்று ஏலத்தில் விட நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்