350 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
ஊட்டி நகராட்சியில் வரி செலுத்தாததால் 350 குடிநீர் இணைப்புகளை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் வரி செலுத்தாததால் 350 குடிநீர் இணைப்புகளை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
குடிநீர் இணைப்பு துண்டிப்பு
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இங்கு 1,27,540 பேர் வசித்து வருகின்றனர். 30,090 சொத்து வரிதாரர்களும், 4,124 தொழில் வரிதாரர்களும், 14,773 குடிநீர் வரி இணைப்புதாரர்களும் உள்ளனர். இதேபோல் வரியில்லா இனங்களாக 2,456 கணக்குகள் உள்ளது. இதில் சொத்து வரி, தொழில் வரி ஆண்டிற்கு 2 முறையும், குடிநீர் வரி 3 மாதத்திற்கு ஒரு முறையும் கட்ட வேண்டும். ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2022-23-ம் நிதியாண்டில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்பட பல்வேறு வரியினங்கள் மூலம் ரூ.82.84 கோடி வசூலாக வேண்டி இருந்தது. கடந்த மார்ச் 31-ந் தேதி வரை ரூ.51.96 கோடி வரி வசூலிக்கப்பட்டது. இன்னும் வரி மற்றும் கட்டண நிலுவை தொகை ரூ.29.93 கோடி உள்ளது. ஊட்டியில் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாத பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை கட்டிடங்களில் இதுவரை 350 குடிநீர் இணைப்புகளும், 300 பாதாள சாக்கடை இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன.
ஊக்கத்தொகை
இந்தநிலையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டப்பிரிவின்படி சொத்து உரிமையாளர்கள், தங்களது 2023-24-ம் ஆண்டிற்கான சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்று பயன் அடையலாம் என ஊட்டி நகராட்சி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.