சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கடலூரைச் சேர்ந்த முருகன் (வயது 36) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அதில் அவர், பேண்டில் அணிந்து இருந்த பெல்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.25 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள 580 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதுபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் ஏறி சோதனை செய்தனர். அதில் விமானத்தில் உள்ள கழிவறையில் கேட்பாரற்று கிடந்த பார்சலில் இருந்த ரூ.9 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 220 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். ஒரே நாளில் ரூ.35 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.