ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 35 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 35 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-05-12 19:16 GMT

குன்னம்:

ஜல்லிக்கட்டு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே கொளத்தூரில் உள்ள குப்பன் ஏரியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு, நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மத்திய அரசின் விலங்குகள் நலவாரிய ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு தலைவர் டாக்டர் எஸ்.கே.மிட்டல் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 585 காளைகள் கொண்டு வரப்பட்டன. இதில் பரிசோதனையில் 11 காளைகள் தகுதி இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டது. மீதமுள்ள 574 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 257 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

35 பேர் காயம்

காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த சில காளைகளை கண்டு வீரர்கள் சிதறி ஓடினர். திமிறிய காளைகளை சில வீரர்கள் திமிலை பிடித்து வீரத்துடன் அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினர் சார்பில் கட்டில், பீரோ, நாற்காலி, பாத்திரங்கள், தங்க நாணயம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 35 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக 9 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

பரிசோதனை

காலை 7.30 மணிக்கு தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டு மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அவர்களின் உடல் தகுதி குறித்து மருத்துவ குழுவினர் ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக பரிசோதித்து சான்று அளிக்கப்பட்ட பின்னரே காளைகள் களம் கண்டன. மேலும் ஜல்லிக்கட்டையொட்டி 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன், ஆலத்தூர் ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கண்டு களித்ததோடு, கைத்தட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்